கடந்த ஆண்டு இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் முக்கிய விமானப்படை தளங்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதல் நடந்து பத்து மாதங்கள் கடந்துவிட்டன. இருப்பினும், அந்தப் பேரழிவில் இருந்து பாகிஸ்தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத்துறை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

​குறிப்பாக, இத்தாக்குதலில் பலத்த சேதமடைந்த பாகிஸ்தானின் போலாரி (Bholari) விமானத் தளத்தில், சீரமைப்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலால் நிலைகுலைந்த அந்தத் தளத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர பாகிஸ்தான் ராணுவம் போராடி வருகிறது.

பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதிகளில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா விடுத்த எச்சரிக்கை, பாகிஸ்தானின் தற்காப்பு அரண்களில் எவ்வளவு பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.