வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கு மத்தியில், அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சந்திர சென், நீதிமன்றக் காவலில் இருந்தபோது காலமானார். கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு தினாஜ்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மேலும் சிறையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உரிய மருத்துவ சிகிச்சையும் ஜாமினும் வழங்கப்படாததே அவரது மரணத்திற்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஜனவரி 11-ம் தேதி ப்ரோலாய் சக்கி என்ற மற்றொரு இந்துத் தலைவர் சிறையில் உயிரிழந்த நிலையில், தற்போது ரமேஷ் சந்திர சென்னின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அடுத்தடுத்து நிகழும் இந்தத் தொடர் மரணங்கள் அந்நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மற்றும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இச்சம்பவம் சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.