அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் இணைந்து நடத்திய பாலியல் கடத்தல் நெட்வொர்க் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களில், ஒரு நயவஞ்சகமான ‘வலையில்’ சிக்கி சிதைந்த ஆயிரக்கணக்கான பெண்களின் கண்ணீர் கதைகள் பதிவாகியுள்ளன.
“ஜேன்” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 14 வயது சிறுமி மிச்சிகனில் உள்ள ஒரு கலை முகாமில் மேக்ஸ்வெல்லை சந்தித்துள்ளார். மேக்ஸ்வெல்லின் அன்பான பேச்சையும், வளர்ப்பு நாயுடன் அவர் காட்டிய மென்மையையும் கண்டு அந்தச் சிறுமி அவரை நம்பினார். அதன் பின்னரே எப்ஸ்டீன் அங்கு அறிமுகமாகியுள்ளார். கல்வி உதவித்தொகை, கலை ஆர்வம் எனப் பேசி அந்தச் சிறுமியின் தாயாரையும் எப்ஸ்டீன் தன் வசப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் எப்ஸ்டீனின் இல்லத்திற்கு அழைக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு, ‘மசாஜ்’ செய்யும் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதுவே காலப்போக்கில் மிகக்கொடூரமான பாலியல் அத்துமீறல்களாக மாறியது. பணம் கொடுத்து அந்தச் சிறுமியை அடிமையாக்கி, மூன்று ஆண்டுகள் வரை சித்திரவதை செய்துள்ளனர்.
ஆவணங்களின்படி, எப்ஸ்டீன் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களது குற்றச்செயல்கள் பல்வேறு உத்திகளைக் கொண்டு இயங்கியுள்ளன: அதாவது ஏழை மற்றும் நலிவடைந்த பின்னணி கொண்ட சிறுமிகளுக்கு பணம் கொடுத்து மசாஜ் செய்ய அழைப்பது. மேலும் ஒரு தோழியை அழைத்து வந்தால் கூடுதல் பணம் என ஆசை காட்டி, பாதிக்கப்பட்டவர்களையே புதிய நபர்களைத் தேடும் கருவியாக மாற்றினர்.
லட்சியக் கனவுகளுடன் இருக்கும் இளம்பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு மற்றும் உயர்கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி ஏமாற்றுவது. வெளிநாடுகளில் மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்களை அமெரிக்காவிற்கு வரவழைப்பது போன்றவைகளும் அடங்கும்.
இந்தக் குற்றச்சங்கிலியில் கிஸ்லேன் மேக்ஸ்வெல் மூளையாகச் செயல்பட்டுள்ளார். பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவிகளின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்து, ஆதரவற்ற அல்லது பலவீனமான நிலையில் உள்ள சிறுமிகளைக் கண்டறிவதில் அவர் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். ஆரம்பத்தில் பரிசுப் பொருட்கள், சினிமா, ஷாப்பிங் என அன்பால் கட்டிப்போட்டு, பின்னர் அவர்களைப் பொருளாதார ரீதியாக எப்ஸ்டீனைச் சார்ந்து இருக்குமாறு மாற்றியுள்ளனர்.
லண்டன், பாரிஸ், நியூயார்க் மற்றும் எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தனித்தீவு எனப் பல இடங்களில் இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளன. எப்ஸ்டீன் 2019-இல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மேக்ஸ்வெல்லுக்கு 2022-இல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு சுமார் 120 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கப்பட்டாலும், “அவர் இன்னும் எங்கும் இருப்பது போலவே நான் உணர்கிறேன்” என்ற ஒரு பெண்ணின் டைரி குறிப்பு, அவர்கள் அடைந்த மன உளைச்சலின் ஆழத்தைக் காட்டுகிறது.
