முந்தைய தலைமுறைகளில் குடும்பத்தின் தூணாக விளங்கிய தந்தைமார்கள், கண்டிப்பின் மறுஉருவமாகவும், பிள்ளைகளுடன் ஒருவித இடைவெளியைப் பேணக்கூடியவர்களாகவும் மட்டுமே பார்க்கப்பட்டனர். “அப்பா வர்றார்” என்ற ஒற்றை வார்த்தையைக் கேட்டாலே, விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் பயந்து போய் வீட்டுப் பாடப் புத்தகத்தை கையில் எடுக்கும் கால கட்டம் ஒன்று இருந்தது.

அன்றைய அப்பாக்களின் பாசம் என்பது வார்த்தைகளிலோ, அரவணைப்பிலோ வெளிப்படாமல், குடும்பத்திற்கான அவர்களது ஓயாத உழைப்பிலும் கண்டிப்பிலும் மட்டுமே மறைந்திருந்தது. இதனால், தங்களுக்குத் தேவையான விஷயங்களைக் கேட்பதற்குக் கூட, தாயை ஒரு ‘தூதராக’ப் பயன்படுத்தும் கட்டாயமே அன்றைய பிள்ளைகளுக்கு இருந்தது. இந்த ‘தலைமுறை இடைவெளி’ தந்தை-பிள்ளை உறவில் ஒரு மௌன எல்லையை எப்போதும் தக்க வைத்திருந்தது.

ஆனால், இன்றைய  நவீன உலகத்தில் இந்த இலக்கணம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. இன்றைய அப்பாக்கள் தங்களது பிள்ளைகளின் வெறும் பாதுகாவலராக மட்டுமில்லாமல், அவர்களின் ‘பெஸ்ட் பிரெண்ட்’ எனப்படும் சிறந்த நண்பர்களாக உருவெடுத்து வருகிறார்கள். பிள்ளைகளின் படிப்பு, காதல், கனவுகள் மற்றும் மன அழுத்தம் என அனைத்தையும் வெளிப்படையாகப் பேசும் அளவிற்குத் தோழமையுடன் தோள் கொடுக்கிறார்கள்.

குழந்தைகளுடன்  சேர்ந்து ரீல்ஸ் செய்வது, வீடியோ கேம் விளையாடுவது முதல் அவர்களின் உலகிற்குள் தங்களை முழுமையாகப் பொருத்திக் கொள்ளும் Cool Dads ஆக  மாறிவிட்டனர். கண்டிப்பைக் குறைத்து, அன்பையும் சுதந்திரத்தையும் ஆயுதமாக்கியுள்ள இந்தத் தலைமுறை மாற்றம், தந்தை – பிள்ளை இடையேயான இடைவெளியைக் குறைத்து, காலத்தால் அழியாத ஒரு உன்னத நட்புறவை சமூகத்தில் விதைத்து வருகிறது.