குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் ஆபரேஷன் தியேட்டருக்குள் இரண்டு முதலாமாண்டு எலும்பியல் (Orthopaedics) முதுகலை மருத்துவ மாணவர்களை, சீனியர் மாணவர்கள் கொடூரமாக ராகிங் செய்து ‘கோழித்தண்டனை’ போட வைத்துள்ள அதிர்ச்சி வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மருத்துவச் சங்கத்தின் இளநிலை மருத்துவர்கள் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் துருவ் சவுகான் இந்த சிசிடிவி காட்சியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ஆபரேஷன் தியேட்டருக்குள் எங்களை சீனியர்கள் கோழித்தண்டனை போட வைக்கிறார்கள். இரவு முழுவதும் தூங்கவிடாமல் நிற்க வைத்து, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் நேரத்தைக் குறிப்பிட்டு செல்ஃபி எடுத்து அனுப்பச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்” என்று அந்த மாணவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
The moment I received this CCTV picture from GMC Bhavnagar (Gujarat), my mind froze for a moment thinking how mentally and physically devastated these Orthopaedic surgery resident doctors must have felt at this moment when they were made a murgha openly in the Operation Theatre.… https://t.co/2CQo5Q8QdQ pic.twitter.com/1ZXIDQgkZr
— Dr.Dhruv Chauhan (@DrDhruvchauhan) June 19, 2026
இந்த விவகாரம் ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி அமைப்பால் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பான்ஷேரியா உத்தரவின் பேரில் கல்லூரியின் ராகிங் தடுப்புக் குழு தீவிர விசாரணை நடத்தியது. முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களிடம் தனித்தனியாகப் பெறப்பட்ட எழுத்துப்பூர்வ வாக்குமூலங்களின் அடிப்படையில் ராகிங் கொடுமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ராகிங்கில் ஈடுபட்ட 6 சீனியர் மருத்துவ மாணவர்கள் மீது குஜராத் சுகாதாரத்துறை அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முதன்மைக் குற்றவாளியான ஒரு மாணவர் 2 ஆண்டுகளுக்கும், 3 மாணவர்கள் தலா 1 ஆண்டுக்கும், மேலும் 2 மாணவர்கள் 6 மாதங்களுக்கும் கல்லூரியை விட்டு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த 6 மாணவர்களும் உடனடியாக விடுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சஸ்பெண்ட் காலத்தில் அவர்கள் எந்தவொரு கல்வி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
