அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை அவதூறாகச் சித்தரிக்கும் வீடியோவை வெளியிட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டும் அந்த வீடியோவின் இறுதியில், ஒபாமா தம்பதியினரின் முகங்களைக் குரங்குகளின் உடலில் பொருத்தி ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ இனவெறியைத் தூண்டும் வகையில் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு அந்த வீடியோ டிரம்பின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டதுடன், இது ஒரு உதவியாளர் செய்த தவறு என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது.
இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தொடக்கப் பகுதியை மட்டுமே தான் பார்த்ததாகவும், வீடியோவின் இறுதியில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
தான் எந்தத் தவறும் செய்யாததால் யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த வீடியோ ஊழியர்களால் சரிபார்க்கப்பட்டிருக்கும் என்று தான் நம்பியதாகத் தெரிவித்தார்.
பிப்ரவரி மாதமான இது கருப்பின மக்களின் வரலாற்று மாதமாகக் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபரை இழிவுபடுத்தும் வகையில் டிரம்ப் நடந்து கொண்டது அங்குள்ள பல்வேறு சமூக அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
