வயதான தோற்றத்தை முற்றிலும் ஒழித்து, எப்போதும் இளமையோடு  வாழ வேண்டும் என்ற தனது தீவிர ஆசைக்காக உலகப் புகழ்பெற்ற 48 வயதான அமெரிக்கத் தொழில் அதிபர் பிரையன் ஜான்சன்  தற்போது வெளியிட்டுள்ள ஒரு தகவல் ஒட்டுமொத்த இணையதளத்தையுமே அதிர வைத்துள்ளது. ஆய்வகத்தில் உள்ள ஒரு சிறிய தட்டில் தனது சொந்த உடலின் உயிரணுக்களைக் கொண்டு, தனக்கு நிகரான ஒரு ‘பேபி குளோனை’ தான் உருவாக்கி வளர்த்து வருவதாக அவர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த விசித்திரப் பரிசோதனைக்கு பின்னணியில் ஒரு வியப்பூட்டும் அறிவியல் காரணம் உள்ளது. பிரையன் ஜான்சன் தனது உடலில் இருந்து இரத்த அணுக்களை எடுத்து, நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் அவற்றை ஆரம்பக்கட்ட கரு நிலைக்கு மாற்றியுள்ளார். இதன் மூலம் வளரும் தனது சொந்த குளோனைப் பயன்படுத்தி, தனது உடலுக்குத் தேவையான புதிய உறுப்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதிய மருந்துகளைப் பரிசோதிக்கவும், இளமையான செல்களைத் தனது உடலுக்குள் செலுத்திக் கொள்ளவும் முடியும் என அவர் நம்புகிறார். எளிமையாகச் சொன்னால், தான் என்றும் இளமையாக வாழத் தனது சொந்த குளோனையே அவர் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரையன் ஜான்சனுக்கு ‘ஆட்டோ இம்யூன் கேஸ்ட்ரிடிஸ்’  என்ற அரிய வகை வயிற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியே சொந்த வயிற்றுப் பகுதியைத் தாக்கும் இந்த நோய்க்குப் பூரண சிகிச்சை இல்லாத நிலையில், தனது இந்த குளோனிங் முயற்சி அந்த நோயைக் குணப்படுத்துவதோடு, தனது முதுமையையும் தடுக்கும் என அவர் வாதிடுகிறார். தனது உடலைப் பராமரிக்கவும், இளமையைத் தக்கவைக்கவும் மட்டும் இவர் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரையனின் இந்த அறிவிப்புக்கு உலக அளவில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளது. சிலர் இதனை மருத்துவ உலகின் மாபெரும் மைல்கல் என்று பாராட்டினாலும், பலர் இது ஒரு ஆபத்தான விளையாட்டு மற்றும் விளம்பர யுக்தி என்று சாடுகின்றனர். வரலாற்று ரீதியாக, கடந்த 2002-ம் ஆண்டு ‘ஈவ்’ என்ற பெயரில் உலகின் முதல் மனித குளோன் குழந்தை உருவாக்கப்பட்டதாகப் பிரான்ஸ் விஞ்ஞானி ஒருவர் கிளப்பிய சர்ச்சை, ஆதாரங்கள் இல்லாததால் பொய் என நிரூபணமானது. இன்றுவரை உலகில் எந்தவொரு உயிருள்ள மனித குளோனும் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படவில்லை என்பதே நிஜம்.

ஒரு முழு மனிதனை அப்படியே உருவாக்குவது மனித கண்ணியத்திற்கு எதிரானது என்பதால், ஐநா சபைமற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்குத் தீர்வு காண, உடலின் செல்களை மட்டும் ஆய்வகத்தில் வளர்க்கும் ‘தெரபியூட்டிக் குளோனிங்’ முறைக்கு மட்டும் பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் கடுமையான விதிகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் இதற்கு என்று தனிப்பட்ட மத்திய சட்டம் இல்லை என்றாலும், முழு மனித குளோனை உருவாக்குவது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.