திருமணம் ஆகாத ஏமாற்றத்தில் மனமுடைந்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. இவரது மூத்த மகன் டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட், நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோல் சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கடந்தாண்டு இவரது தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், சர்ச்சிலுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. பல பெண்களைப் பார்த்தும் திருமணம் நடக்காத விரக்தியில் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

நேற்று மாலை, தனது தாயிடம் திருமணம் செய்து வைக்க வேண்டி வலியுறுத்திய சர்ச்சில், பின்னர் இரவு தனது படுக்கையறைக்குச் சென்றார். அங்கு மின்விசிறியில் சால்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பழவந்தாங்கல் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டு பரிசோதித்தபோதும் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மருத்துவரின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.