நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஆர்.கே. ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முகமது அலி பாருக் (40), மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பேட்டை பகுதி செயலாளராகவும், சுத்தமல்லி விலக்கு பகுதியில் வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருபவராகவும் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுத்தமல்லி சீனிவாசநகரைச் சேர்ந்த ஆனந்த், தனது காரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும்படி பாருக்கிடம் தொலைபேசியில் கேட்டுள்ளார். ஆனால் பாருக் அதனை மறுத்துவிட்டதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த ஆனந்த், பாருக்கின் ஒர்க்ஷாப்பிற்கு வந்து நேரடியாக தகராறு செய்துள்ளார். சூழ்நிலை மோசமடைந்த நிலையில், ஆனந்த் அரிவாளை எடுத்துக்கொண்டு முகமது அலி பாருக்கை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. தப்பிக்க முயன்ற பாருக்கை, ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் தாக்கியதில் அவர் கடுமையாக காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். அதேசமயம், பாருக்கை ஆனந்த் விரட்டி சென்று அரிவாளால் வெட்டும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை அடுத்து, குற்றவாளியை கைது செய்வதற்கான போலீசின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
