திருநெல்வேலியில் பாஜக கட்சியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் விழாவினை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடு முழுவதும் தற்போது தகுதியான ஆளுநர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எப்படிப்பட்ட ஆளுநர்கள் இருந்தார்கள் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஆளுநர் செய்வது ஒரு நியாயம் என்றும், இப்போது முதல்வரான பிறகு ஒரு நியாயம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழகத்திற்கு இதுவரை 45 மத்திய அமைச்சர்கள் வருகை பிரிந்து பல்வேறு விதமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இவர்களின் ஆய்வு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தெரியும். கடந்த 2021-ம் ஆண்டு 25 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

84 மசோதாக்களில் 15 மசோதாக்களுக்கு மட்டுமே ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பதோடு ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவுக்கு விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேசாமல் இருப்பதால்தான் திமுக வாய்க்கு வந்தபடி ஆளுநரை விமர்சித்து வருகிறார்கள். ஆளுநர் மட்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும். ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதன் பிறகு தமிழக அரசின் இலச்சினையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான். தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் இரண்டுமே ஒரே பொருள்தான். தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் இணக்கமான முறையில் செல்ல வேண்டும் என்று கூறினார். மேலும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. கொள்கை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.