தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களில் விவசாய மின் இணைப்பு 2.20 லட்சம் தான். ஆனால் திமுக பொறுப்பை ஏற்று 15 மாதங்களில் விவசாய மின் இணைப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் என்றார். அதன் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கோவையை சேர்ந்த தீபாராதணி என்ற பெண் முதல்வரின் முகவரி திட்டத்தில் இருக்கும் சிஎன் ஹெல்ப்லைன் நம்பருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பொதுவாக புகார் தெரிவிப்பதற்கும் கோரிக்கைகளை வைப்பதற்கும் தான் சிஎம் ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசுவார்கள். இந்நிலையில் அந்த பெண்ணிடம் முதல்வர் உங்களுடைய புகார் என்னமா என்று கேட்டதற்கு நான் புகார் தெரிவிப்பதற்காக போன் செய்யவில்லை உங்களுடைய தொலைபேசி நம்பர் என்னிடம் இல்லாததால் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக போன் செய்தேன் என்று கூறியுள்ளார்.
நான் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். என்னுடைய பிள்ளைக்கு என்னால் காலையில் உணவு கொடுக்க முடியாது. என்னுடைய மகன் 5-ம் வகுப்பு படிக்கிறான். ஆனால் தற்போது காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக என்னுடைய மகன் தினந்தோறும் காலையில் சாப்பிடுவதோடு அந்த உணவு தரமானதாகவும் இருக்கிறது. அதற்காக நன்றி சொல்வதற்காக தான் போன் செய்தேன் என்று கூறியுள்ளார். இப்படி அந்த தாயார் நெகிழ்ச்சியோடு கூறியது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் ஏழை எளிய மக்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துகளின் காரணமாகத்தான் நாங்கள் இன்று உத்வேகத்துடன் பணியாற்றுகிறோம் என்று முதல்வர் கூறினார்.