தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஜாதி, மதம் பேதம் இன்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை எனில் அது பொங்கல் பண்டிகை தான். தமிழகத்தில் ஒருபோகம், இரண்டு போகம், முப்கோகம் என அறுவடை செய்யக்கூடிய நிலப்பகுதிகள் இருக்கிறது. ஒரு மாவட்டத்திற்கு உள்ளையே இந்த நிலப்பகுதிகள் மாறுபடும்.
இதன் காரணமாக தை மாத அறுவடையை அறுவடை திருநாளாக கொண்டாடி வருக்கின்றனர். அதுபோன்று ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் காய்கறிகள், கிழங்குகள், தானியங்கள், மலர்கள் ஆகிய அனைத்து பயிர்களும் அறுவடை ஆகும் மாதம் தை மாதம் தான். ஆகையால் தை மாதம் பிறக்கும் நாளை இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தமிழர்கள் வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அறுவடை செய்த புது நெல்லை கொண்டு சூரியனை பார்த்து பொங்கல் வைப்பர். அதன்பின் அறுவடை செய்யப்பட்ட காய்கறி வகைகள் மற்றும் கிழங்குகளை கொண்டு கூட்டு சமைக்கப்பட்டு அதுவும் சூரியனுக்கு படைக்கப்பட்டு வழங்கப்படும். மேலும் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த கரும்பும் சூரியனுக்கு படைக்கப்படும். இயற்கையாக திறந்த வெளியில் படையலிட்டு சூரியன் மட்டுமல்லாமல், காற்று, ஆகாயம், மண், நீர் ஆகிய ஐம்பூதங்களுக்கும் நன்றி கூறும் விழாவாக பொங்கல் பண்டிகை அமைகிறது.