கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சித்ரதுர்கா புறநகர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். முதலில் அந்த இளம்பெண்ணின் அடையாளம் தெரியாத நிலையில், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் சித்ரதுர்கா மாவட்டம், இரியூர் தாலுகாவில் உள்ள கோவர்ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த வர்ஷிதா (19) என்பது தெரியவந்தது. அவர் சித்ரதுர்காவில் உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி, அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் ஆகஸ்ட் 14-ம் தேதி ஊருக்குச் செல்வதாக விடுதி வார்டனிடம் கடிதம் கொடுத்துள்ளார். கல்லூரி சீருடையுடன் செல்போனில் பேசியபடி விடுதியை விட்டு வெளியேறியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும், விசாரணையில் வர்ஷிதாவை அவரது காதலன் சேத்தனே கொலை செய்து உடலை எரித்தது உறுதியானது.
வர்ஷிதாவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்றாம் நிலையில் இருந்த சேத்தனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வர்ஷிதா வேறொரு இளைஞருடன் பழகியது சேத்தனுக்கு தெரியவந்ததால், ஆத்திரத்தில் அவர் வர்ஷிதாவை கண்டித்தார். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. சம்பவத்தன்று, சேத்தன் வர்ஷிதாவை கோனூருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சேத்தன் வர்ஷிதாவை தாக்கி கொலை செய்துள்ளார் . பின்னர், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். காவல்துறையினர் சேத்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
