உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வக்கீல் பரமானந்த குப்தா, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக ஆத்திரமடைந்து, ஒரு இளம்பெண்ணுடன் இணைந்து அவர்கள் மீது பொய் வழக்குகள் தாக்கல் செய்தார். அதாவது தனது பெயரில் 18 புகார்களையும், இளம்பெண் மூலம் 11 புகார்களையும் பதிவு செய்த இவர், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பொய்யான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில், பூஜா ராவத் எனும் இளம்பெண் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என உறுதியானது.
இந்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி பூஜா ராவத்துக்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால், பரமானந்த குப்தாவுக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், 5.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர் வக்கீல் தொழில் செய்யவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு, பொய் புகார்கள் மூலம் மற்றவர்களை பழிவாங்க முயல்வதன் விளைவுகளை எடுத்துக்காட்டாக வெளிப்படுத்தியுள்ளது.
