டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியின் முதல்-மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்று, பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, வெள்ளத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில், 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென அவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேகா குப்தா மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த நபர் ஆவணங்களை கொடுப்பது போல பாவனை செய்து, திடீரென அவரை தாக்கினார். இதில் முதல்-மந்திரிக்கு லேசான காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர் ராஜேஷ் கிம்ஜி என அடையாளம் காணப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜேஷின் தாயார் பானுபென், தனது மகன் நாய்கள் மீதான அன்பால் இந்தச் செயலை செய்ததாகவும், ஏழை நிலையில் உள்ள தனது மகனை மன்னிக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
