அமெரிக்காவின் லோவா மாகாணத்தைச் சேர்ந்த ரண்டால் கீன் மற்றும் மோலி தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ‘நாஷ் கீன்’ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, பிறந்ததிலிருந்தே உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், நாஷ் தாயின் கருவில் இருந்து வெறும் 21 வாரங்கள் (133 நாட்கள்) தான் இருந்த நிலையில் குறைப்பிரசவமாக வெளிவந்தார்.

பிறந்தபோது நாஷின் எடை சுமார் 283 கிராம் மட்டுமே இருந்தது. இது, தற்போது உலகில் மிக குறைந்த காலத்தில் குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளது. இதற்குமுன் 2020ஆம் ஆண்டு அலபாமாவில் பிறந்த குழந்தையே இந்த சாதனையை வைத்திருந்தது. ஆனால், நாஷ் அந்த சாதனையை முறியடித்து உலக சாதனை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறந்ததிலிருந்து நாஷ், அயோவா பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 6 மாதங்கள் வைத்து கவனிக்கப்பட்டார். உடல்நிலை மிக நுணுக்கமாக கண்காணிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் தான் வீட்டுக்கு அனுமதிக்கப்பட்டார்.

தற்போது குழந்தை நாஷ் தனது முதல் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். “குழந்தையின் உயிர் தற்காத்தது கடவுளின் அருள் மற்றும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு தான்” என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் சாதனை அமெரிக்கா மட்டுமின்றி உலகத்தையே பெருமிதப்படுத்தியுள்ளது.