சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பக்தவச்சல்லபுரம் ஜோதி இராமலிங்கம் தெருவில் தணிகைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவீரன்(77) என்ற தந்தையும், சரோஜினி(64) என்ற தாயும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சரோஜினி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த முத்து வீரன் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்று அதிகாலை பெற்றோர் தங்கி இருந்த அறைக்கு தணிகைவேல் சென்று பார்த்துள்ளார். அப்போது தாய் படுக்கையிலும், தந்தை தூக்கிலும் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்து வீரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.