திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரது மனைவி மோனிகா (25). காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பூண்டி பகுதியிலும் இரவு நேரங்களில் கடுமையான புழுக்கம் இருந்துள்ளது.

இதனால் தனது வீட்டிற்கு ஏசி வாங்கித் தருமாறு மோனிகா தனது கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், வசதி வாய்ப்பு காரணமாக ஏசி வாங்க ஆகாஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்றிரவு புழுக்கம் தாங்க முடியாமல் ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றுள்ளனர். மோனிகா மட்டும் அறையில் தனியாகத் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை ஆகாஷ் கீழே வந்து பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் மோனிகா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

தகவலறிந்து வந்த புல்லரம்பாக்கம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், இந்தச் சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ஏசி இயந்திரத்திற்காக இளம் பெண் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.