ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், கார்களுக்கு 20 ரூபாய், வேன்களுக்கு 50 ரூபாய் என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று ஸ்கூட்டரில் வந்த 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கோவில் பணியாளர்களிடம் 20 ரூபாய் நோட்டை கொடுத்து நுழைவு சீட்டை வாங்கினர்.

பின்னர் மீதி பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் கொடுத்த இருபது ரூபாய் நோட்டை பார்த்தபோது அது குழந்தைகள் விளையாடும் போலியான 20 ரூபாய் என்பதை அறிந்து பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோவில் பணியாளர் ஒருவர் கூறியதாவது, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு செல்கின்றனர். பெரும்பாலானோர் கிழிந்த ரூபாய் நோட்டுகளை கொடுக்கின்றனர்.

அதனை திருப்பி கொடுத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் அதனை வாங்கிக்கொள்வோம். தற்போது இரண்டு பெண்கள் 20 ரூபாய் போலி நோட்டை கொடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை அவர்கள் எங்காவது தெரியாமல் அதை வாங்கி ஏமார்ந்து இருக்கலாம். இதுபோன்ற போலி ரூபாய் நோட்டுகளை குழந்தைகள் விளையாடுவதற்காக கடைகளில் விற்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.