சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் ஆண்டியப்பன் நாயக்கன் தெருவில் ரம்யா(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனது தங்கை அனிதா(20), ஜோதி(25) தனது குழந்தைகள் விக்னேஷ்(8), நேந்திரா(12) ஆகியோருடன் மணிகண்டன் என்பவரது ஆட்டோவில் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த ரம்யா எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் ரம்யாவின் கால் மீது ஏறி ஆட்டோ சாலை பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரம்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.