சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவருக்கு சொந்தமான ஸ்டீல் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி இருக்கிறது. இங்கு பீகாரை சேர்ந்த 27 பேர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்த கம்பெனியின் முதல் இரண்டு தளங்களில் தொழிலாளிகள் தங்கும் அறை இருக்கிறது. நேற்று முன்தினம் கம்பெனியின் மொட்டை மாடிக்கு தொழிலாளர்கள் தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது கமலேஷ் குமார் என்பவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கமலேஷ் குமார் தூக்க கழகத்தில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.