திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூரில் இருக்கும் தனியார் மில்லில் இலங்கையை சேர்ந்த மங்கலநிசாந்தா(48) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு மங்கலநிசாந்தா தனக்கும் தனது உறவினர்களுக்கும் விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் தனியார் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா என்பவரை அனுப்பியுள்ளார். அப்போது விசா பெறுவதற்கு 11 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என ஜஷ்வா கூறியுள்ளார். இதனால் மங்கலநிசாந்தா உள்ளிட்ட உறவினர்கள் ஜஷ்வாவின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக 11 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஜஷ்வா கொடுத்த விசா மூலம் மங்கலநிசாந்தாவின் உறவினர் அமரசிங்கே என்பவர் இலங்கை சென்றுள்ளார். அப்போது கொழும்பு விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது அது போலியான விசா என்பது தெரியவந்தது. இதனால் அமரசிங்கேவை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி அறிந்த மங்கலநிசாந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஏஜென்சி உரிமையாளரான ஜஷ்வா மீது வழக்குபதிவு செய்தனர். அவர் ஏற்கனவே வேறொரு மோசடி வழக்கில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.