சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில், பிறக்கப்போகும் புதிய ஆண்டில் திமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்;
அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்” எனத் தெம்பாகக் கூறினார். “திமுகவின் போலியான வாக்குறுதிகளையும், பசப்பு வார்த்தைகளையும் நம்ப மக்கள் இனி தயாராக இல்லை” என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், “கள்ளக்குறிச்சியில் மக்கள் செத்து விழுந்தபோது வராத முதல்வர், இப்போது தேர்தலுக்காக அங்கே விசிட் அடிக்கிறார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் எனத் தமிழகமே கடந்த 10 நாட்களாகப் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. அவர்களின் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் முதல்வர் தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
