கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளியனூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 89 குடும்பத்தினரை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா வைரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் புலவழகன் முன்னிலையில் பொதுமக்கள் நேற்று காலை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்த மனுவில் நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் இடவசதி இல்லை. இதனால் சாலை புறம்போக்கு, குளத்து புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்து வருகிறோம். மேலும் ஒரு வீடுகளில் இரண்டு, இரண்டு குடும்பத்தினர்களாக குடியிருப்பதால் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.