கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 21-வது வட்டத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் குமார் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு அசோக் குமார் கஞ்சா விற்பதாக கூறி மணிகண்டன் பொதுமக்களுடன் சேர்ந்து அவரை தாக்கியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் வட்டம் 21-இல் இருக்கும் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அசோக் குமார் அவரது நண்பர்களான அரவிந்தன், கணேஷ்குமார், சுந்தர செல்வம் ஆகியோர் மணிகண்டனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் நாட்டு துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அரவிந்தன், கணேஷ்குமார், அசோக்குமார், சுந்தர செல்வன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 கத்திகள், நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.