கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நவமலை, ஆழியாறு பகுதிகளில் சுற்றி திரிகிறது. நேற்று முன்தினம் நவமலை மின்சார வாரிய குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை 2 கார்களை தந்தத்தால் குத்தி உடைத்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் சம்பவ இடத்திற்கு சென்று யானையை விரட்டினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, யானைக்கு மதம் பிடித்திருப்பதால் இரண்டு குழுக்கள் அமைத்து வாகனத்தில் சென்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். மதம் குறைந்ததும் யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விடும். தற்போது தொந்தரவு அளித்தால் யானையின் கோபம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து, பகல் நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.