பிரிட்டனில் உள்ள பர்மிங்காம், ஹைட்கேட்டைச் (Highgate, Birmingham) சேர்ந்த 13 மாதக் குழந்தை சாம் அன்வர் அல்ஷாமெரி (Sam Anwar Alshameri), வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ‘டிரெய்ன் கிளீனர்’ (Drain Cleaner) என்ற வேதிப்பொருளை, பால் பாட்டில் என நினைத்துக் குடித்ததால், மிகவும் அபாயகரமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை சாம் குடித்த அந்த அரிக்கும் திரவம் (Corrosive Liquid), அவனது இதயத்தை நிறுத்தியதுடன், உதடுகள், வாய், நாக்கு மற்றும் சுவாசப் பாதையை தீவிரமாக எரித்துவிட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவனது இதயம் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் நின்றுபோனது என்று சாமின் தந்தை நதீன் அல்ஷாமெரி (Nadeen Alshameri) வேதனையுடன் கூறியுள்ளார்.
“அவனால் இப்போது ஒரு வார்த்தைகூடப் பேச முடியாது” என்று கூறிய தந்தை, சாமின் வாய் இப்போது மூடத் தொடங்கிவிட்டது, அவனால் உணவையோ, தண்ணீரையோ விழுங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சாமிற்கு உடனடி மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (Reconstructive Surgery) தேவைப்படும் நிலையில், அதன் தேதி இன்னும் உறுதி செய்யப்படாததால், சிகிச்சைக்கு நிதி திரட்ட ‘கோஃபண்ட்மீ’ (GoFundMe) மூலம் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர்.
