சீனாவில், “படுத்துக்கிடக்கும் போட்டி” என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு விநோதப் போட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுப்பாமல் படுத்திருக்க வேண்டும் என்பதே விதி. பாட்டோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் நவம்பர் 15ஆம் தேதி காலை 10:18 மணிக்குத் தொடங்கி, 16ஆம் தேதி மாலை 7:53 மணி வரை நடந்த இந்தப் போட்டியில், பல போட்டியாளர்கள் டயப்பர்கள் அணிந்து வந்திருந்தனர்.
படுத்திருக்கும்போது செல்போன் பயன்படுத்தலாம், படிக்கலாம், உணவை வரவழைக்கலாம், ஏன், ஒருக்களித்துப் படுக்கலாம், ஆனால், உட்காரவோ, எழுந்து நிற்கவோ, கழிவறைக்குச் செல்லவோ கூடாது. விதிகளை மீறுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.
இந்த விநோதப் போட்டியில் சுமார் 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணி நேரத்திற்குள் 186 பேர் வெளியேறினர். இறுதியில், ஒரு இளம் போட்டியாளர் 33 மணி நேரம் 35 நிமிடங்கள் வரை படுத்திருந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.
அவருக்கு சுமார் ₹37,442 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வை நடத்திய நிறுவனம், மற்ற நகரங்களிலும் இதுபோன்ற போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
