இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மூலமாக நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், வீடியோ காலில் மட்டுமே பார்த்து பழகிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக நபர் ஒருவர் 36 லட்சம் ரூபாயை இழந்துவிட்டு, திருமணமான ஒன்பதே நாட்களில் பெரும் ஏமாற்றமடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விமல் குமார் என்ற நபர், மேட்ரிமோனி தளம் மூலம் அனிதா என்ற பெண்ணை அறிமுகம் செய்துகொண்டார். நேரில் ஒருமுறை கூட சந்திக்காமல், வெறும் வீடியோ கால் மூலமாக மட்டுமே பேசி பழகிய அனிதா, தன்னை ஒரு பெரிய தொழிலதிபர் என்று கூறி விமலை நம்ப வைத்துள்ளார்.
இதனால் அதை உண்மை என்று நம்பிய விமல், அவசரத் தேவைகள் மற்றும் வணிக முதலீடு என்ற பெயரில் அனிதா கேட்ட போதெல்லாம் வெவ்வேறு தவணைகளாக மொத்தம் 36 லட்சம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
அதோடு பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணமான ஒன்பதே நாட்களில் அந்தப் பெண்ணின் உண்மையான முகம் விமலுக்குத் தெரியவந்தது. அனிதா ஏற்கனவே திருமணமானவர் என்பதும், பணத்தைப் பறிப்பதற்காகவே திட்டமிட்டு விமலைத் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார் என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, விமலின் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிக்கொண்டு அனிதா திடீரென தலைமறைவாகிவிட்டார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த விமல், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அந்த மோசடிப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
