இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது. அதில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மறைந்திருக்கிறார்கள் என்று கூறி அடிக்கடி இஸ்ரேல் படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் நேற்று பெத்லகேம் நகரத்தில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் தங்கியுள்ள முகாமில் இஸ்ரேல் படை தேடுதல் வேட்டை மேற்கொண்டது. இதனை அங்கிருந்த பாலஸ்தீன இளைஞர்கள் எதிர்த்தனர். எனவே, இருதரப்பிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்டதில் 15 வயதுடைய பாலஸ்தீனிய  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இஸ்ரேல் படையினரின் இந்த கொடூர செயலுக்கு பாலஸ்தீன அரசாங்கம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இஸ்ரேல் படை தங்கள் மீது பாலஸ்தீனியர்கள் கண்ணாடி பாட்டில்களில் தீ வைத்து தூக்கி எறிந்ததால் தான் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டோம் என்றும் விளக்கம் தெரிவித்திருக்கிறது.