தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் அவர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார், ஆனால் அதிமுகவை குறித்து அவர் பேசவில்லை. அத்துடன் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கும் பங்கு உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அதிமுகவை அவர் விமர்சித்து பேசாத காரணத்தினால், சில அமைச்சர்கள் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எனவே தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதோ என்ற கேள்விகளும் எழுந்தது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்கு இன்னும் சில காலங்கள் இருக்கிறது அது வரும்போது அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார் என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், அவருடைய அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் சமீபத்தில் பேட்டி அடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட தான் விரும்புவார்.

இது தெரியாமல் பழனிச்சாமி, விஜய்யுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கின்றார். ஆனால் விஜய் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமியினுடைய ஓட்டைப் படையில் ஏறி பயணிக்க மாட்டார். அவர் அதிமுக வாக்குகளையும் தன்வசம் படுத்த தனித்து நின்று தான் போட்டியிடுவார். சீக்கிரமாக அதிமுக கட்சிக்குள் ஒரு எரிமலை வெடிக்க தான் போகிறது எனவே கரையை கடக்க அதிமுக, பாஜகவுடன் தான் போட்டியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.