வதோதராவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் பீல்டிங்கில் காட்டிய அசாத்திய வேகம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடியபோது ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஜாக் ஃபால்க்ஸ் வீசிய பந்தை ரோகித் சர்மா மிக பலமாக பவுண்டரிக்கு விரட்ட முயன்றார்.
அந்தப் பந்து மின்னல் வேகத்தில் சென்றபோது, பாயிண்ட் திசையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் திடீரென காற்றில் பறந்து ஒரு கையால் பந்தைப் பிடிக்க முயன்றார். அந்தப் பந்து அவரது கையில் பட்டு நழுவிய போதும், தரையில் விழுவதற்குள் மீண்டும் அதை பிடிக்க அவர் மேற்கொண்ட சிறுத்தைப் போன்ற முயற்சி மைதானத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
A rare day #flying Glenn Phillips dropped a catch. 😳 Gravity finally won a round against Glenn Phillips #INDvNZ #WeymarOnCricket pic.twitter.com/9ZOAEynPsA
— WeymarOnCricket (@weymarplanet) January 11, 2026
கிளென் பிலிப்ஸின் இந்த அசாத்திய முயற்சியைக் கண்டு பந்துவீச்சாளர் ஜாக் ஃபால்க்ஸ் மற்றும் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சிரித்தபடி வியப்பை வெளிப்படுத்தினர். மற்ற எந்த ஒரு பீல்டராக இருந்தாலும் அந்தப் பந்தை தொடக்கூட முடியாது என்ற நிலையில், பிலிப்ஸ் காட்டிய இந்த வேகம் மற்றும் துடிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் குவிக்க, இறுதியில் கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
