பொதுமக்கள் யூகிக்க முடியாத வகையிலான நூதன திருட்டு முறைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் சாமர்த்தியமாக பிக்பாக்கெட் அடிப்பதும், வேறு சிலர் வணிக வளாகங்களில் யாருக்கும் தெரியாமல் பொருட்களை எடுத்துச் செல்வதும் வழக்கம்தான்.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் மிகவும் தந்திரமான முறையில் பழங்களைத் திருடும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி, மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
A real magician spotted in a Russian supermarket. pic.twitter.com/S2agPjmpOl
— NEXTA (@nexta_tv) December 11, 2025
அந்த வீடியோவில், ஒரு பிளாஸ்டிக் பை மற்றும் அதற்குக் கீழே மளிகை சாமான்களை வைக்கப் பயன்படுத்தப்படும் ட்ராலி பையுடன் நிற்கும் நபர் ஒருவர், ஒரு பழத்தை பிளாஸ்டிக் பையில் போடுவது போலக் காட்டிக்கொண்டு, மற்றொரு பழத்தை சாமர்த்தியமாக ட்ராலி பைக்குள் தள்ளிவிடுகிறார். வெளியில் இருந்து பார்த்தால், அவர் பழத்தை பிளாஸ்டிக் பையில் போடுவது போலவே தெரியும் நிலையில், உண்மையில் அவர் திருட்டில் ஈடுபடுவது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ளது.
‘அசலான மந்திரவாதி ரஷ்ய சூப்பர் மார்க்கெட்டில் சிக்கினார்’ என்ற நகைச்சுவையான தலைப்புடன் ‘நெக்ஸ்டா டிவி’ என்ற பயனரால் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட பதினொரு விநாடிகள் ஓடும் இந்தக் காணொளி, ஒரு லட்சத்து எழுபத்து ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
மேலும், ‘இத்தகைய திருடர்களிடம் இருந்து சூப்பர் மார்க்கெட்டைப் பூட்டிப் பாதுகாக்க வேண்டும்’, ‘ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்ற சலுகையைப் பயன்படுத்திக் கொண்டார்’ என்று நகைச்சுவையாகவும், சிலர் ‘இவர் ஒரு தொழில்முறை திருடன்’ என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
