அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் (New York, US), நெரிசல் மிகுந்த சாலையில் பணிக்குச் சென்று கொண்டிருந்த நியூயார்க் நகரப் போலீஸ் துறையின் (NYPD) துப்பறியும் நிபுணரான மைக்கேல் கிரீனி (Michael Greaney) என்பவர், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியானச் சம்பவம் நடந்துள்ளது.

அவசரகாலப் பாதையில் (Emergency Shoulder Lane) அதிவேகமாகச் சென்ற கருப்பு எஸ்.யு.வி. (SUV) காரைக் கண்ட கிரீனி, சட்டென தனது காரை நிறுத்தி, அதற்குக் காரணத்தைக் கேட்டுள்ளார்.

அந்த காரை ஓட்டியத் தந்தை, தனது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், குழந்தையைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்ட கிரீனி உடனடியாகச் செயல்பட்டு, குழந்தையைக் காரிலிருந்து வெளியே இழுத்தார். உடனடியாக அவர் குழந்தையை முதுகில் தட்டி, மூச்சுத் திணறலைச் சரிசெய்து, மீண்டும் சுவாசிக்க வைத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைக்கு இப்போது நலமாக இருப்பதாக அதன் தந்தை பின்னர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.  17 வருடங்களாகப் போலீஸ் துறையில் இருக்கும் கிரீனிக்கு, இணையவாசிகள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.