உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா நகரில் உள்ள மொஹல்லா பட்வாலில் வெள்ளிக்கிழமை காலை அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று ஏற்பட்டது. காலை 11 மணியளவில், பாழடைந்த நிலையில் இருந்த ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்தச் சந்துப்பாதை வழியாக பைக்கில் சென்ற அகிஃப் மன்சூரி, சுவர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளில், குறுகிய பாதையில் பைக்கில் சென்று கொண்டிருந்த மன்சூரி மீது திடீரென சுவர் இடிபாடுகள் விழும் காட்சி பதிவாகியுள்ளது. இடிபாடுகள் விழுந்ததால் தூசி மேகம் பரவி, பார்வையே மறைந்தது. சத்தம் கேட்டு விரைந்த உள்ளூர்வாசிகள், மிகுந்த முயற்சியுடன் இடிபாடுகளில் சிக்கிய மன்சூரியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பைக்கும் சேதமடைந்தது.

அந்த வீடு அப்பகுதி வாசி அசாருக்குச் சொந்தமானது என்றும், நீண்ட காலமாக மூடப்பட்டு பராமரிப்பு செய்யப்படாத நிலையில் இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த மழையால் சுவர் பலவீனமடைந்து இடிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல பாழடைந்த வீடுகள் அப்பகுதியில் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 14.9 மி.மீ மழை பதிவாகியுள்ளதுடன், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 8 வரை 457.2 மி.மீ மழை பெய்துள்ளது, இது சாதாரண அளவை விட 10% அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.