பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீனத் தலைக்கவசத்தை உருவாக்கியுள்ள சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பங்கஜ் தன்வார் என்ற அந்த இளைஞர், பெங்களூரு சாலைகளில் நிலவும் ஒழுங்கற்ற போக்குவரத்தைக் கண்டு விரக்தியடைந்து, தனது தலைக்கவசத்தை ஒரு நடமாடும் போக்குவரத்து காவல் கருவியாக மாற்றியுள்ளார்.
i was tired of stupid people on road so i hacked my helmet into a traffic police device 🚨
while i ride, ai agent runs in near real time, flags violations, and proof with location & no plate goes straight to police.
blr people – so now ride safe… or regret it. pic.twitter.com/lWaRO01Jaq
— Pankaj (@the2ndfloorguy) January 3, 2026
இந்தத் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள், வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் மற்ற வாகனங்களின் விதிமீறல்களைக் கண்டறிகிறது. குறிப்பாக தலைக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தவறான திசையில் வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாகன எண் மற்றும் இருப்பிடத்துடன் கூடிய ஆதாரத்தைப் போக்குவரத்து காவல்துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக உடனடியாக அனுப்பி வைக்கிறது.
இந்த நூதன முயற்சி குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பெங்களூரு போன்ற நெரிசலான நகரங்களில் இது போன்ற தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் பலர் இந்தத் தொழில்நுட்பத்தைத் தங்களது வாகனங்களிலும் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருவதோடு, இத்தகைய கருவிகளை இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே வேளையில், தனிமனித சுதந்திரம் மற்றும் கண்காணிப்பு குறித்த விவாதங்களையும் இச்சம்பவம் கிளப்பியுள்ளது. இருப்பினும், விபத்துகளைக் குறைக்கவும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் தொழில்நுட்பம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
