சேலத்தில் நடைபெற்ற டாக்டர் ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் செயல் தலைவரும் ராமதாஸின் மகளுமான ஸ்ரீகாந்தி பேசிய பேச்சு அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அன்புமணியை “ஆர்.எஸ்.எஸ் அடிமை” என்று விமர்சித்ததன் மூலம் பாஜக-வுடன் தங்களுக்கு இனி பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேசமயம், “ஆட்சியில் பங்கு வேண்டும், 25 எம்.எல்.ஏ-க்களுடன் சட்டசபைக்குச் செல்வோம்” என்று அவர் முழங்கியது, திமுக கூட்டணியையும் அவர்கள் விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

இதனால், ‘ஆட்சியில் பங்கு’ தரத் தயாராக இருக்கும் விஜய்யின் தவெக-வுடன் டாக்டர் ராமதாஸ் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

“2026 தேர்தல் வியூகத்தை ஐயா (ராமதாஸ்) வகுத்துவிட்டார்; யாருடன் கூட்டணி என்பது அவருக்குத் தெரியும்” என்று ஸ்ரீகாந்தி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். திமுக ஆட்சியில் பங்கு தராத நிலையில், 25 தொகுதிகளைப் பெற்று ஆட்சியில் அமர தவெக மட்டுமே இப்போதைக்குச் சரியான வாய்ப்பாகத் தெரிகிறது.

ஒருபுறம் அன்புமணி பாஜக-வுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அவரை வீழ்த்த விஜய்யுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தால் அது வட மாவட்டங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“யார் அந்த வெற்றிக் கூட்டணி?” என்பதை அறிவிக்கும் அதிகாரத்தை ராமதாஸிடமே பொதுக்குழு வழங்கியுள்ளதால், விரைவில் விறுவிறுப்பான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.