மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியாரும், திமுக எம்.பி கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட இந்த உடல்நலக் குறைவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் ‘வெல்லும் தமிழ் – தென் மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில்’ கனிமொழி எம்.பி பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று அவர் உரையாற்றி வரும் நிலையில், சென்னையில் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகி உள்ளது.
மாநாடு முடிந்ததும் கனிமொழி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயாரின் உடல்நிலை குறித்து கனிமொழி கேட்டறிந்து வரும் நிலையில், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திமுகவினர் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
