தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதிய ஜனதா கட்சியும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அமித் ஷா முன்னிலையில் உறுதி செய்யப்பட்ட இந்தக் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து முதற்கட்டத் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜக தரப்பில் கடந்த முறையை விடக் கூடுதல் தொகுதிகள் கோரப்பட்டதாகவும் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க அதிமுக தரப்பிலிருந்து கசிந்த உத்தேசத் தொகுதிப் பட்டியல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் பாஜக தலைமை அவர்களுக்கு முக்கியமான தூது ஒன்றை அனுப்பியுள்ளது.
முந்தைய காலங்களில் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததையும் திமுகவிற்கு எதிராக அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுட்டிக்காட்டியுள்ள டெல்லி தலைமை எக்காரணம் கொண்டும் திமுக பக்கமோ அல்லது புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் பக்கமோ சென்றுவிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஓபிஎஸ் அல்லது டிடிவி தினகரனுக்குத் துணை முதலமைச்சர் பதவி வரை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் பியூஷ் கோயல் டெல்லிக்கு அளித்துள்ள ரகசிய அறிக்கையில் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்துச் சில முக்கியக் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக பாஜகவின் மையக்குழு முடிவுகளைக் கூட எடப்பாடி பழனிசாமியே தீர்மானிக்கும் அளவிற்கு மாநிலத் தலைமை அவரோடு மிக நெருக்கமாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழக பாஜகவின் தனித்தன்மை பாதிக்கப்படுவதாகவும் இனி வரும் காலங்களில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்றவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்து மற்ற சிறிய கட்சிகளையும் ஒன்றிணைப்பதே சரியான வியூகமாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தைத் தளர்த்திப் பலமான கூட்டணியை அமைக்கப் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக முயன்று வருகிறது.
