நேபாள நாட்டுக்குச் சொந்தமான ‘நேபாள ஏர்லைன்ஸ்’ நிறுவனம், தனது விமான சேவை குறித்த வரைபடத்தை வெளியிட்டு இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. தங்களது விமான நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை அந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சேவை உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த வரைபடத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைப் பாகிஸ்தான் எல்லைக்குள் காட்டியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் செயல்பட்ட நேபாள ஏர்லைன்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்திய அரசின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து, அந்த சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கிய நேபாள ஏர்லைன்ஸ், “தவறுதலாக நடந்த இந்த பிழைக்கு மன்னிப்பு கோருகிறோம்” என விளக்கமளித்துள்ளது.
