பொதுவாகக் காவல்நிலையம் அல்லது சிறைச்சாலை என்றாலே சாமானிய மக்கள் அச்சப்படுவது வழக்கம். “ஜெயில் வாசலை மிதிப்பதே அவமானம்” என்று கருதும் சமூகத்தில், சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மக்கள் நேரில் உணர்ந்து கொள்வதற்காக தெலங்கானா அரசு “ஃபீல் தி ஜெயில்” என்ற நூதன திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

முதலில் மேடக் மாவட்டத்தில் உள்ள 220 ஆண்டுகள் பழமையான சங்கரெட்டி பாரம்பரிய சிறையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சஞ்சல்குடா மத்திய சிறை வளாகத்திலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்படி, விருப்பமுள்ள பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி (முன்னர் ரூ.500 ஆக இருந்தது), ஒருநாள் முழுவதும் கைதியாக வாழலாம்.

உங்களுக்குக் கைதி சீருடை, சோப்பு, ஸ்டீல் தட்டு, குவளை என அனைத்தும் வழங்கப்படும். கைதிகள் உண்ணும் அதே உணவே உங்களுக்கும் பரிமாறப்படும். உங்கள் செல்போன் மற்றும் உடைமைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, 24 மணி நேரம் உண்மையான சிறை சூழலை அனுபவிக்கலாம். குற்றங்கள் செய்வதால் ஏற்படும் விளைவுகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.