உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) மாணவர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் ஆற்றிய தேர்தல் உரை தற்போது இந்திய அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
நதீம் தரின் (NT) விடுதியின் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அய்யூபா என்ற ஆப்பிரிக்க மாணவர், தனது பிரசார உரையைத் தொடங்கிய விதம் அனைவரையும் கவர்ந்தது. “நான் உங்களைப் போலப் பொய் சொல்ல மாட்டேன்” என்று நிதானமாகத் தொடங்கிய அவர், அடுத்த சில நிமிடங்களில் அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கினார்.
“வெயில் அதிகமாக இருப்பதால், மாணவர்கள் அனைவருக்கும் ஏசி (AC) வசதி செய்து தருவேன்; விடுதியிலிருந்து கல்லூரி தூரமாக இருப்பதால், இங்கிருந்து மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவேன்; விடுதியிலேயே நீச்சல் குளம் கட்டுவேன்” என்று அவர் அடுக்கு மொழியில் கூற, அங்கு திரண்டிருந்த மாணவர்கள் உற்சாகத்தில் ‘அய்யூபா ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டனர்.
View this post on Instagram
மாணவர்களின் மனதைக் கவரும் விதமாக, “நான் செயலாளர் ஆனால், விடுதியில் உள்ள அனைவருக்கும் ஒரு நாளைக்கு 3 வேளை தேநீர் வழங்கப்படும் மற்றும் ஒவ்வொரு தளத்திலும் வாஷிங் மெஷின் வைக்கப்படும்” என அவர் அறிவித்தபோது கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தன. அய்யூபாவின் இந்தி உச்சரிப்பும், அவரது தன்னம்பிக்கையான உடல்மொழியும் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
மேலும் யார் இவருக்கு உரை எழுதிக் கொடுத்தது? ஒரே அடியாக மெட்ரோ ரயில் வரை சென்றுவிட்டார்” என்று ஒரு பயனர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இன்ஜினியரிங் தவிர மற்ற எல்லாவற்றையும் இன்ஜினியர்கள் செய்வார்கள் என்பதற்கு இவரே சாட்சி என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியக் கலாச்சாரம் மற்றும் மொழியை இவ்வளவு அழகாக உள்வாங்கிக் கொண்டு, ஒரு மாணவர் தேர்தலில் இவ்வளவு சுவாரஸ்யமாகப் பங்கெடுப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
