ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க, அவரது எலும்புக்கூட்டையே ஒரு பையில் மூட்டையாகக் கட்டி வங்கிக்கு எடுத்து வந்த ஜீது முண்டா என்பவரின் செயல் இந்தியா முழுவதையும் அதிர வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த தனது சகோதரி கல்ராவின் கணக்கில் இருந்த 19,000 ரூபாயைப் பெற ஜீது முண்டா பலமுறை வங்கிக்கு அலைந்துள்ளார்.

ஆனால், முறையான ஆவணங்கள் இல்லை எனக் கூறி வங்கி ஊழியர்கள் அவரை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமும் விரக்தியும் அடைந்த ஜீது, தனது சகோதரி இறந்துவிட்டதை நிரூபிக்க அவரது கல்லறையைத் தோண்டி, எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணத்தை அவரிடம் ஒப்படைக்கச் செய்தது.

ஆனால், தற்போது வங்கி நிர்வாகம் ஒரு புதிய புகாரை முன்வைத்துள்ளது. ஜீது முண்டா வங்கிக்கு வந்தபோது மதுபோதையில் இருந்ததாகவும், அதனால்தான் அவரிடம் ஆவணங்களைக் கேட்டபோது தகராறு செய்ததாகவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. “தங்கள் தவறை மறைக்க வங்கி நிர்வாகம் ஏழை முதியவர் மீது பழி போடுகிறது” என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.