டெல்லி மெட்ரோ ரயில் என்பது தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் ஒரு முக்கிய போக்குவரத்துத் தடம். ஆனால், சமீபகாலமாக இங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களும், பயணிகளுக்கு இடையேயான மோதல்களும் இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றன. அந்த வகையில், இருக்கைக்காக இரு பயணிகள் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

(Ghar Ke Kalesh) என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், பயணிகள் நெருக்கடியாக நின்றுகொண்டிருக்கும் ஒரு மெட்ரோ பெட்டியில், ஒரு பெண்ணுக்கும் அமர்ந்திருக்கும் ஆண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இருக்கையில் அமருவது தொடர்பாகத் தொடங்கிய இந்தச் சண்டை, வார்த்தைப் போராக மாறியது.

தொடக்கத்தில் மற்ற பயணிகள் இதைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் திடீரென ஆத்திரத்தில் அந்த நபரை ஓங்கி ஒரு அறை விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக இருக்கையை விட்டு எழுந்து அந்தப் பெண்ணை நோக்கிப் பாய்ந்தார்.

சூழல் மோசமாகி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கிய பிறகே, சக பயணிகள் சுதாரித்துக் கொண்டனர். உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்த முயன்றனர். இந்த மோதலின் பின்னணி மற்றும் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். டெல்லி மெட்ரோ இப்போது தினசரி பொழுதுபோக்குத் தளமாக மாறிவிட்டது என்று ஒரு தரப்பினர் கிண்டல் செய்தாலும், நீண்ட பயண நேரம், கடும் கூட்ட நெரிசல் மற்றும் வேலைப்பளு காரணமாகப் பயணிகளிடையே பொறுமை குறைந்து வருவதையே இத்தகைய சம்பவங்கள் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே டெல்லி மெட்ரோவில் நடனமாடுவது, ரீல்ஸ் எடுப்பது மற்றும் சண்டையிடுவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி மெட்ரோ நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது.