நவீன இந்தியாவில், குறிப்பாகப் பெருநகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள் மத்தியில் சாதி பாகுபாடு மறைந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், நிஜ நிலைமை முற்றிலும் வேறாக இருப்பதை ஒரு மேட்ச் மேக்கரின் (திருமணத் தரகர்) பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
‘தி டேட் க்ரூ’ (The Date Crew) என்ற திருமணத் தகவல் மையத்தின் நிறுவனரான ஓந்த்ரிலா கபூர், அண்மையில் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் ஒரு வினோதமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரிடம் வரன் தேடி வந்த 32 வயது இளம் பெண் ஒருவர், ஒரு ஆடை நிறுவனத்தின் உரிமையாளர். நன்கு படித்த, முற்போக்கான குடும்பப் பின்னணி கொண்டவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், மாப்பிள்ளை பார்ப்பதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.
https://www.linkedin.com/feed/?trk=public_post_embed_linkedin-logo-image
அதாவது எனக்கு பிராமணர்கள் அல்லது ராஜபுத்திரர்கள் போன்ற மேல்சாதி வரன்கள் மட்டுமே வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளை வேறு சாதியாக இருந்தால், அவரது ஆண்டு வருமானம் 80 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும் என்று அந்தப் பெண் கூறியது ஓந்த்ரிலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் மூலம், சமூக அந்தஸ்து அல்லது சாதிப் பெருமை என்பது பணத்தால் ஈடுகட்டப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டதைக் கபூர் சுட்டிக்காட்டியுள்ளார். “சாதி முக்கியம், ஆனால் அதைவிட அதிகப் பணம் இருந்தால் சாதியை விட்டுக்கொடுக்கத் தயார்” என்பது போன்ற மனநிலை, திருமணத்தை ஒரு புனிதமான பந்தமாகப் பார்க்காமல், ஒரு ‘வியாபாரத் ஒப்பந்தமாக’ மாற்றிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதற்குக் காரணம் கேட்டபோது, “எனக்குத் தெரியவில்லை, என் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள்” என்று அந்தப் பெண் பதிலளித்துள்ளார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஓந்த்ரிலா கபூர், 2026-ஆம் ஆண்டிலும் படித்த நடுத்தரக் குடும்பங்களில் சாதிப் பாகுபாடு ‘தவிர்த்தல்’ என்ற பெயரில் நுணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். உண்மையான அன்பைத் தேடுவதை விட்டுவிட்டு, சாதியையும் சிடிசி-யையும் (CTC) தேடும் சமூகமாக மாறிவிட்டோம். இந்தியத் திருமணங்கள் எப்போதுமே ஒரு வர்த்தகப் பரிமாற்றம் தான் என்று பலரும் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளனர். மேலும் சாதிப் பாகுபாட்டைத் தகர்க்க விரும்பினால், இளைஞர்கள் முதலில் தங்கள் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும், வரன் தேடும் போது சாதியைத் தாண்டி மனிதர்களைப் பார்க்கப் பழக வேண்டும் என்றும் ஓந்த்ரிலா கபூர் அறிவுறுத்தியுள்ளார்.
