விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு வருபவர்களிடம் ஒரு கும்பல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் அன்னகோடி தலைமையிலான போலீசார் வெள்ளிமேடுபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முதர்ஷீர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆபேல் என்பது தெரியவந்தது. அவர்களிடம் 81 போலியான ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் 48 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.

இருவரும் திண்டிவனம் உள்பட பல்வேறு பகுதிகளில் பணம் எடுக்க தெரியாதவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் எடுக்கச் சென்ற ராதாகிருஷ்ணன் என்பவரிடம் முதர்ஷீர், ஆபேல் ஆகியோர் போலீஸ் என கூறி கஞ்சா வைத்துள்ளீர்களா என கேட்டனர்.

இதனை தொடர்ந்து சோதனை செய்வது போல நடித்து இருவரும் 51 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து போலி ஏடிஎம் கார்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.