கேட்டவுடன் நாவில் எச்சில் ஊறும் சிக்கன் 65 ,ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற உணவுகளுடன் சாப்பிட மக்கள் அடம்பிடிக்கும் உணவு பட்டியலில் முதலிடம் பிடிப்பது மயோனைஸ். முட்டை, சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் வர்த்தக முறையில் செய்யும்போது பல செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படும் மயோனைஸில் மறைந்திருக்கும் ஆபத்துகள் ஏராளம். வீட்டில் தயாரிக்கப்படும் மயோனைஸை ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

அதே நேரம் கடையில் விற்பனை செய்யப்படும் மயோனைஸ் ஒரு மாதம் வரை தாக்குப் பிடிக்க அதில் கலக்கப்படும் ரசாயனங்களே காரணம். சமைக்கப்படாத உணவு பொருட்களால் தயாராகும் மயோனைஸ் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே வந்தால் இரண்டு மணி நேரத்திலேயே அதில் பாக்டீரியாவின் இனப்பெருக்க செயல்பாடு தொடங்கி விடும். இதை உட்கொள்ளும் நபர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் ஃபுட் பாய்சன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகள் வரை கொண்டிருப்பதால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதோடு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு வருவதற்கு சாத்திய கூறுகள் அதிகரிக்கிறது. ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள், மயோனைஸ் உள்ளிட்ட உணவுகளை உட்கொண்டு வந்தால் மாரடைப்பு கூட ஏற்படலாம் என எச்சரிக்கும் மருத்துவர்கள் மயோனைஸ் பயன்பாட்டில் கவனம் செலுத்த அறிவுறுத்துகின்றனர்.