சமையல் எரிவாயு வீட்டில் பயன்படுத்தி சமைக்கும் போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொல்லை ஏற்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விறகடுப்பு, கறி எடுப்பு போன்றவற்றில் சமைத்த நிலை மாறி எங்கும் எப்போதும் கேஸ் அடுப்பில் சமைக்கும் நிலைதான் தற்பொழுது உள்ளது. அதிலும் எலக்ட்ரிக் ஸ்டவ், இண்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோவன் போன்றவற்றின் வாயிலாகவும் அநேகம் பேர் சமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி சமைத்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொல்லை ஏற்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எரிபொருள் நிறுவனமான கிளாஸ், ஐரோப்பிய பொது சுகாதார கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். சமையல் எரிவாயு எரியும்போது நைட்ரஜன் டை ஆக்சைடு வெளிபடுகின்றது.

இது காற்றை அசுத்தப்படுத்துகின்றது எனவும் சுவாச பிரச்சனைக்கு காரணமாகின்றது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு என்விரான்மென்டல் ரிசர்ச் அண்ட் பப்ளிக் ஹெல்த் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் அமெரிக்காவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 12.7 சதவீத குழந்தைகள் வீட்டில் சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் சமையல் எரிவாயுவால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொல்லை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.