சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில் ராகுல் என்ற பெயரில் வந்த நட்பு காதலாக மாறியது. ஈரோடு கல்லூரி மாணவன் என்று அறிமுகமான ராகுல், மாணவியை சந்திக்க சேலம் வரச் சொன்னான்.

சென்னையிலிருந்து ரயிலில் சேலம் வந்த மாணவி, 3 சவரன் தங்க வளையல், 1 சவரன் செயின், லேப்டாப் என ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை, கழிவறைக்குச் செல்லும் முன் ராகுலிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

சென்று வந்த பின்னர் ராகுல் மாயமாக, போன் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்துள்ளது. அதனால் பதறிய மாணவி, பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளைப் பறித்து ஓடிய ராகுலைத் தேடி வருகின்றனர்.

இதேபோல், சேலம் மேட்டூரில் 15 வயது சிறுமி சித்திரிகாவை காதலித்து, 30 பவுன் நகைகளை மோசடி செய்த சம்பவமும் நடந்துள்ளது. கூலித்தொழிலாளி பாரதியின் மகளான சித்திரிகா, நிசாந்த் பிலிப் (19) என்பவரை காதலித்தார். திருமணம், தொழில் என ஆசை காட்டி, வீட்டு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை நிசாந்த் எடுத்துவிட்டு ஓடியுள்ளார்.

அதனால் அதிர்ந்த பாரதி, கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நிசாந்தை கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் காதல், ஆசை வார்த்தைகளால் இளம் மனங்களை ஏமாற்றி, நகைகளை அபகரிக்கும் இத்தகைய மோசடிகள் பெற்றோரை உறைய வைத்துள்ளன.