குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே, 5 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அவரது தாயின் இரண்டாவது கணவரே கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பிணத்துடன் 2 நாட்கள் பசியால் வாடிய ஒன்றரை வயது குழந்தை மீட்கப்பட்டதும் இதனைச் சுற்றி அதிர்ச்சியை கூட்டியுள்ளது.

அஞ்சுகிராமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த செல்வமதன் (36), ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். முதல் திருமணம் முடிந்து மனைவியை பிரிந்த அவருக்குப் பின்னர், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த செல்வி (31) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். செல்விக்கு முன்னதாகவே அபிநவ் (5) என்ற மகன் இருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது.

சமீப காலமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த மாதம் செல்வி, குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து செல்வமதன், அஞ்சுகிராமம் போலீசில் மனைவி மாயமாகியதாக புகார் அளித்தார். அதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செல்வமதன் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. செப்டம்பர் 2ஆம் தேதி காலை, வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, 5 வயது அபிநவ், ஒரு அறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்தக்கறைகளுடன் பிணமாக கிடந்தான்.

அதே அறையில், ஒன்றரை வயது குழந்தை பிணத்துடன் பசியால் வாடி மயங்கி கிடந்தது. உடனே போலீசார் அந்தக் குழந்தையை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்த விசாரணையில், மனைவி மாயமாகியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த செல்வமதன், ஆகஸ்ட் 31ஆம் தேதி, அபிநவை கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக தெரியவந்தது. பின்னர், ஒன்றரை வயது குழந்தையையும் வீட்டில் விட்டுவிட்டு கதவை பூட்டி தப்பிச் சென்றார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செல்வமதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.